|
பொ-ரை: கார்காலத்துப் பொருந்திய கொன்றை மலர்களாலாகிய தாரினை அணிந்தவனும், கச்சுப் பொருந்திய தனங்களை உடைய உமைமங்கையை ஒரு பங்கில் உடையவனும், பொழில் நுகரவருவோர் இவர்ந்துவந்த தேருலாவுகின்ற பூம்பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலியில் எழுந்தருளியிருப்பவனும் ஆகிய ஆரா அமுதை அடைந்து உய்வீர்களாக. கு-ரை: கார்உலாமலர் - கார்காலத்து மேகங்கள் உலவும் காலத்தே மலர்கின்ற. தாரினான் - மாலையை அணிந்தவன். வார்உலாம் - கச்சு அணிந்த. தேருலாம் பைஞ்ஞீலி, பொழில் சூழ்ந்த பைஞ்ஞீலி என்க. ஆர்கிலா அமுது - உண்ணா அமுதம், தெவிட்டா அமுதம். தருக்கி - செருக்கி. தடவரை - பெரிதாகிய கயிலைமலை. பிறிதொரு பாடலை (தி.5.ப.2.பா.9) ஒத்துளது இப்பாடல். |