பாடல் எண் : 42 - 1
நன்று நாடொறும் நம்வினை போயறும்
என்று மின்பந் தழைக்கவி ருக்கலாம்
சென்று நீர்திரு வேட்களத் துள்ளுறை
துன்று பொற்சடை யானைத் தொழுமினே.
1
பொ-ரை: திருவேட்களத்துள்ளுறைகின்ற நெருங்கிய பொலிவார்ந்த சடையுடைய ஈசனைத் தொழுவீர்களாக; அங்ஙனம் தொழுதால் நாள்தொறும் நம்வினை பெரிதும் தொலையும்; என்றும் இன்பம் தழைக்க இருந்து உய்யலாம்.
கு-ரை: நாடொறும் நன்று - நாள்தொறும் நன்மையே உண்டாகும். என்றும் - எப்பொழுதும். துன்று - நெருங்கிய. பொற்சடை - பொன்போன்ற சடை எனலுமாம். தொழுமின் - வணங்குங்கள்.