பாடல் எண் : 42 - 2
கருப்பு வெஞ்சிலைக் காமனைக் காய்ந்தவன்
பொருப்பு வெஞ்சிலை யாற்புரஞ் செற்றவன்
விருப்பன் மேவிய வேட்களங் கைதொழு
திருப்ப னாகி லெனக்கிட ரில்லையே.
2
பொ-ரை: கரும்பாகிய விருப்பத்தை விளைக்கும் வில்லை உடைய மன்மதனைக் காய்ந்தவனும், மேருமலையாகிய வில்லினால் முப்புரங்களைச் செற்றவனும், அடியார்களிடத்து விருப்பம் உடையவனும் ஆகிய பெருமான் உறையும் வேட்களத்தைக் கைதொழுது இருந்தேனாயின், எனக்கு இடர்களே இல்லை.
கு-ரை: கருப்புவெஞ்சிலை - கரும்பாகிய கொடிய வில்லையுடைய. காமன் - மன்மதன் காய்ந்தவன் - எரித்தவன். பொருப்பு வெஞ்சிலையால் - இமையவில்லால். புரம் - மூன்று கோட்டைகளை. செற்றவன் - அழித்தவன். விருப்பன் - விரும்புதற்கு உரியவன். இடர் - துன்பம்.