பாடல் எண் : 43 - 3
பிணிகொள் வார்குழற் பேதையர் காதலால்
பணிகள் மேவிப் பயனில்லை பாவிகாள்
அணுக வேண்டி லரன்நெறி யாவது
நணுக நாதன் நகர்திரு நல்லமே.
3
பொ-ரை: பாவம் செய்தவர்களே! மலர் முதலியன விட்டுப் பிணித்தலைக்கொண்ட நீண்ட கூந்தலை உடைய பெண்களிடத்து வைத்த காதலால், அவர்கட்கு ஆளாகிப் பணிகளைப் பொருந்திச் செய்து பயன் இல்லையாதலால், நெருங்கிப் பணி செய்ய வேண்டில் அரன் நெறியே அணுகி திருநல்லம் சென்று வழிபடிவீர்களாக.
கு-ரை: பிணிகொள் - கட்டுதல் பொருந்திய அல்லது மனத்தைப் பிணித்தல் கொண்ட. வார்குழல் - நீண்ட கூந்தல். காதலால் - ஆசையால். பணிகள் - செயல்கள். அணுக - நெருங்க. வேண்டின் - விரும்பினால். அரன்நெறி - அரன்நெறியாவதை; அணுக வேண்டில் என்க. நணுகும் - சென்றடையுங்கள். தலைவனாகிய பெருமான் எழுந்தருளியுள்ள நல்லம் நணுகும் என முடிக்க.