|
பொ-ரை: பித்தேறியவனும், பெரிய தேவர்களால் தொழப் படும் தலைவனும், அழகு பொருந்திய ஆமாத்தூரை விரும்பிப் பொருந்திய முத்துப் போல்வானும் ஆகிய பெருமானை அடியேன் உள்ளத்தே முயன்று உள்குதலும், அன்பு என்னும் வெள்ளம் பரவி எழுவதாயிற்று; காண்பீர்களாக. கு-ரை: உள் - உள்ளத்தின்கண்ணே அழுந்திக்காண முயலுதலும் - தியானித்தலும். பத்திவெள்ளம் - அன்புவெள்ளம். பரந்தது - பரவி நின்றது; அகத்தே ஒரு குறிக்கண் வைத்து உரை குறியிறந்த அவன் நிலையை உணரும் வியாபக உணர்வைத் தலைப்பட்டேன் என்றபடி. |