பாடல் எண் : 44 - 8
பண்ணிற் பாடல்கள் பத்திசெய் வித்தகர்க்
கண்ணித் தாகு மமுதினை யாமாத்தூர்
சண்ணிப் பானைத் தமர்க்கணித் தாயதோர்
கண்ணிற் பாவையன் னானவன் காண்மினே.
8
பொ-ரை: பண்ணினை உடைய பாடல்களைப் பாடித்தன்னை அன்புசெய்யும் திறம் உடையவர்களுக்கு இனிக்கும் அமுது போல்வானும், ஆமாத்தூரில் பொருந்தியவனும், தன்னைச் சார்ந்த அடியார்களுக்கு மிகநெருங்கிக் கண்ணிலுள்ள கருமணிப் பாவை போன்றவனுமானவனைக் காண்பீர்களாக!.
கு-ரை: பாடல்கள் பண்ணிற்பத்திசெய்வித்தகர் - தோத்திரப் பாடல்களை இசையோடு பாடி அன்புசெய்யும் அடியார். அண்ணித்தாகும் - இனிக்கும். சண்ணிப்பானை - திருநீற்றை உத்தூளனமாகப் பூசுபவனை எனலுமாம்.
தமர்க்கு - அடியார்க்கு. கண்ணிற் பாவை யன்னான் - கண்மணியை ஒத்தவன். "கண்ணிற் கருமணியே மணியாடுபாவாய்" (தாண்டகம்) அன்னானைக் காண்மின் என்க.