பாடல் எண் : 45 - 1
மாதி யன்று மனைக்கிரு வென்றக்கால்
நீதி தான்சொல நீயெனக் காரெனும்
சோதி யார்தரு தோணி புரவர்க்குத்
தாதி யாவன்நா னென்னுமென் தையலே.
1
பொ-ரை: சிவபெருமான்மேற் காதல் மிகுந்து, 'மனைக் கண் இரு' என்று நான் கூறியபோது, "எனக்கு நீதி சொல்ல நீ என்ன உறவுடையை?" என்று சொல்வதோடு, "ஒளி நிறைந்த தோணிபுரத்து இறைவர்க்குத் தாதியாக நான் ஆவேன்" என்றும் கூறுகின்றனள் என் மகள்.
கு-ரை: மாது இயன்று - பெண்மைக்குரிய இயல்பைமேற்கொண்டு எனலுமாம். மனைக்கு இரு - வீட்டின்கண் இரு. என்றக்கால் - என்று சொல்லிய இடத்து. நீதிதான்சொல (தான் அசை) நீயெனக்கு ஆர் - இனி நீ எனக்கு நீதி சொல்ல என்ன உறவுடையாய். எனும் - என்று சொல்வாள். சோதிஆர்தரு - ஒளி பொருந்திய. தோணிபுரவர்க்கு - திருத்தோணிபுரத் திறைவர்க்கு. தாதி - பணி செய்பவள். என்னும் - என்று சொல்வாள். என் தையல் - என் பெண். செவிலி கூற்று. அன்னையையும் அத்தனையும் அன்றே நீத்துத் தோணிபுரத் திறைவர்மேல் காதல் கொண்டாளொருத்தியின் நிலையை விரித்தது.