|
பொ-ரை: நீர்வளம் தொகுத்த வயல்களை உடைய தோணி புரத்து இறைவர் நிர்வாணமாய் வந்து 'பலி இடுக' என்றார்க்கு இட்டம் மிகுந்த என் பெண்ணின் வெள்வளைகளை அவர்கொள்வது தமது பெருமைக்குச் சிறிதும் தகுதியுடையதன்று. கு-ரை: நக்கம் - நிர்வாணமாய். பலியிடு - பிச்சையிடு. இட்டமிக்க - அன்புகொண்ட. இட்ட - பிச்சையிட்ட. மிக்க - மிக்க காமம் என்றலுமாம். வெள்வளை - வெள்ளிய சங்கவளை. நீர் தொக்க வயல் - நீர் நிறைந்த வயல். தக்கதன்று - தகுதியன்று; தமது பெருமைக்குத் தக்கதன்று. பிச்சை கொடு என்று கேட்டு வளையலைக் கவர்ந்து செல்வது இறைவர்தம் பெருமைக்கு ஏற்றதன்று என்க. |