பாடல் எண் : 45 - 8
உறவு பேய்க்கண முண்பது வெண்தலை
உறைவ தீமம் உடலிலோர் பெண்கொடி
துறைக ளார்கடல் தோணி புரத்துறை
இறைவ னார்க்கிவ ளென்கண்டன் பாவதே.
8
பொ-ரை: உறவு பேய்க்கூட்டங்கள்; உண்பதோ வெண்தலையில்; வாழ்வதோ சுடுகாட்டில்; உடலின் ஒரு கூற்றிலோ ஒரு பெண்கொடி; துறைகள் பொருந்திய கடலை அடுத்த தோணிபுரத்து உறைகின்ற இறைவனாராகிய பெருமானிடத்து இவள் இவற்றுள் எதனைக்கண்டு அன்பு ஆயினள்?
கு-ரை: உறவு பேய்க்கணம் -தமக்கு உறவுடையவான பேய்க் கூட்டங்கள். உண்பது வெண்தலை - உண்ணும் பாத்திரம் வெள்ளிய மண்டையோடு. உறைவது ஈமம் - தங்குமிடம் இடுகாடு. இவை மட்டுமல்ல. அவர் முன்பே மணமானவர் என்பதை அறிவிப்பது. உடலிலோர் பெண்கொடி என்பது. பெண்கொடி - பார்வதி. துறைகளார் - கடல்துறைகள் பொருந்திய. இவள் எதைப் பெருமையாக அவனிடம் கண்டு அவன்மேல் காதல்கொள்கிறாள் என இரங்கிக் கூறினாள் செவிலி.