பாடல் எண் : 46 - 1
துன்னக் கோவணச் சுண்ணவெண் ணீறணி
பொன்னக் கன்ன சடைப்புக லூரரோ
மின்னக் கன்னவெண் திங்களைப் பாம்புடன்
என்னுக் கோவுடன் வைத்திட் டிருப்பதே.
1
பொ-ரை; கோவண ஆடையையும், வெண்ணீற்றுப் பொடியணிந்த மேனியையும், பொன் விரிந்து மலர்ந்தாலொத்த சடையையும் உடைய புகலூர்த்தலத்துப் பெருமானே! மின்னல் மலர்ந்தது போன்ற வெண்திங்களைப் பாம்புடன் எதற்காகத் தேவரீர் திருச்சடையில் உடன்வைத்துக் கொண்டுள்ளீர்?
கு-ரை; துன்னம் - தைக்கப்பட்டதாகிய கோவணம். சுண்ண வெண்ணீறு - திருவெண்ணீற்றுப்பொடி. பொன்நக்கு அன்ன சடை - பொன்னொளி விளங்கும் சடை, மின்நக்கு அன்ன-மின்னல் விளங்கினாற் போன்ற ஒளியை உடைய. என்னுக்கோ -எதற்கோ. உடன் வைத்திருப்பது- பகையாயினவற்றை ஒன்றாய் வைத்திருப்பது.