பாடல் எண் : 46 - 2
இரைக்கும் பாம்பு மெறிதரு திங்களும்
நுரைக்குங் கங்கையும் நுண்ணிய செஞ்சடைப்
புரைப்பி லாத பொழிற்புக லூரரை
உரைக்கு மாசொல்லி யொள்வளை சோருமே.
2
பொ-ரை; இப்பெண்,நெட்டுயிர்க்கும் பாம்பையும், அதனால் கவ்வப்படுகின்ற திங்களையும், நுரைத்தெழுந்து அலைவீசும் கங்கையையும் நுண்ணிய செஞ்சடையில் வைத்துக் குற்றமில்லாத பொழில்கள் சூழ்ந்த புகலூரில் உறையும் பெருமானை உரைக்குமாறு கூறித் தன் ஒளிபொருந்திய வளைகள் நெகிழ்கின்றாள்.
கு-ரை; இரைக்கும் - சீறும் அல்லது பெருமூச்சு விடும். எறிதரு- அப்பாம்பினால் பகைக்கப்படும், நுண்ணிய - மெல்லிய. புரைப்பிலாத - குற்றமில்லாத. உரைக்குமா சொல்லி - உரைக்கும் இலக்கணம் எப்படியோ அப்படியே சொல்லி; பிறரை உரைக்கும் படி சொல்லி எனலும் ஆம், ஒள்வளை சோரும் - ஒள்ளிய வளையல்களைக் கழல விடுவாள்.