பாடல் எண் : 46 - 5
விண்ணி னார்மதி சூடிய வேந்தனை
எண்ணி நாமங்க ளோதி யெழுத்தஞ்சுங்
கண்ணி னாற்கழல் காண்பிட மேதெனில்
புண்ணி யன்புக லூருமென் நெஞ்சுமே.
5
பொ-ரை; விண்ணிற் பொருந்திய பிறைமதியினைச் சூடிய அருள்வேந்தனை, நாமங்கள் கூறியும், திருவைந்ழெுத்தால் தியானித்தும், கண்ணினாற் காழலடிகளைத் தரிசிக்கும் இடங்கள் எவை என்றால் அப்புண்ணியன் எழுந்தருளியிரும் புகலூரும் என் நெஞ்சமும் ஆம்.
கு-ரை: விண்ணினார்மதி - வானத்திலே பொருந்திய மதி. நாமங்கள் எண்ணி - அவனது திருப்பெயர்களை எண்ணி. எழுத்தஞ்சும் ஓதி - திருவைந்தெழுத்துகளை ஓதி. கண்ணினால் - கண்களினால் கழல் - திருவடி. காண்பிடம் - பெருமானைக் காணுமிடம். எது எனில் - எது என்றால். புண்ணியனாய பெருமான் எழுந்தருளியுள்ள புகலூரும் என் மனமுமே ஆகும். புறக்கண்களால் புகலூரிலும், அகக்கண்களால் நெஞ்சிலும் காணலாம். நாமங்களை ஓதி எழுத்தஞ்சும் எண்ணுதல்.