பாடல் எண் : 46 - 8
பெருங்கை யாகிப் பிளிறி வருவதோர்
கருங்கை யானைக் களிற்றுரி போர்த்தவர்
வருங்கை யானை மதகளி றஞ்சினைப்
பொருங்கை யானைகண் டீர்புக லூரரே.
8
பொ-ரை: புகலூர்த்தலத்து இறைவர், பெருங்கையோடு பிளிறி வருவதாகிய ஒரு வலியகையானையை உரித்துப் போர்த்த இயல்பினர்; துதிக்கையை உடைய மதயானைகளாகிய ஐம்புலன்களைப் பொறாது வெல்லும் ஆனைபோல்வார் ஆவர்.
கு-ரை: பெருங்கை - நீண்டு புரளும் துதிக்கை. பிளிறி - அலறி. கருங்கையானை - கரிய கையையுடைய யானை. பெருங்கை யானை கருங்கையானை எனத் தனித்தனி கூட்டுக. களிற்றியானை - இருபெயரொட்டு. உரி - தோல். வரும் - நம்மை அடரவரும், கை யானை -கையினையுடைய யானை; அல்லது நம்மைத் துன்புறுத்தும் மேற் கோளையுடையதாய் வரும் யானைகள்; அவை ஐம்பொறிகள், மத களிறு அஞ்சு-ஐம்பொறிகள், பொருங்கையான்-போரிட்டழிக்கும் கையை உடையவன். கை-மேற்கோள் எனினுமாம். இதற்கு ஆனை-ஆனை போன்றவன் என்க.