பாடல் எண் : 47 - 10
இடுக நுண்ணிடை யேந்திள மென்முலை
வடிவின் மாதர் திறம்மனம் வையன்மின்
பொடிகொள் மேனியன் பூம்பொழிற் கச்சியுள்
அடிக ளெம்மை யருந்துயர் தீர்ப்பரே.
10
பொ-ரை; மிகச் சிறிய (இடுகிய) நுண்ணிடையையும், இளமை உடைய சற்றே ஏந்தினாற்போன்று மெம்முலையையும், உடைய வடிவினையுடைய பெண்கள்பால் உள்ளம் வையாதீர்கள்; திருநீற்றுப்பொடியணிந்த மேனியனாகிய, பொழில் சூழ்ந்த கச்சியேகம்பத்து எழுந்தருளியுள்ள இறைவன் எம்மையெல்லாம் அரிய துயரங்கள் தீர்த்துக் காப்பர்.
கு-ரை; இடுகு- சிறுத்த. நுண்-நுண்ணிய. ஏந்து-நிமிர்ந்த. வடிவின் மாதர்-அழகிய வடிவினையுடைய பெண்கள். திறம்-தன்மை. வையன்மின்-ஈடுபடுத்தாதீர்கள். அருந்துயர்-அரிய துன்பம். தீர்ப்பர். போக்கிக் காப்பர் என்றபடி.