பாடல் எண் : 47 - 11
இலங்கை வேந்த னிராவணன் சென்றுதன்
விலங்க லையெடுக் கவ்விர லூன்றலும்
கலங்கிக் கச்சியே கம்பவோ வென்றலும்
நலங்கொள் செலவளித் தானெங்கள் நாதனே.
11
பொ-ரை; எங்கள் நாதனாகிய கச்சியேகம்பத்து இறைவன், இலங்கை வேந்தனாகிய இராவணன் சென்று தம் திருக்கயிலாயத்தை எடுக்க முற்படுதலும், தன் திருவிரலை ஊன்றக்கலங்குதலுற்று "கச்சி ஏகம்பத்து இறைவா!" என்று அவன் அலறினன்; அது கேட்டு நலம் பெற மீளும் செலவை அவனுக்கு அருளிய பெருங்கருணைத்திறம் உடையவன்.
கு-ரை; விலங்கல்- கயிலைமலை. கச்சியேகம்பவோ- கச்சியேகம்பனே முறையோ. என்றலும்-என்று தோததிரித்தலும். நலங்கொள் செலவு- நன்மையைக்கொண்ட மீட்சி. நாளொடு வாள்பெற்றுச் சென்றதைக் குறித்ததாம்.