பாடல் எண் : 47 - 5
மருந்தி னோடுநற் சுற்றமும் மக்களும்
பொருந்தி நின்றெனக் காயவெம் புண்ணியன்
கருந்த டங்கண்ணி னாளுமை கைதொழ
இருந்த வன்கச்சி யேகம்பத் தெந்தையே.
5
பொ-ரை; கச்சியேகம்பத்தின்கண் எழுந்தருளியுள்ள எந்தை, எனக்கு மருந்தும், சுற்றமும், மக்களும் ஆகப் பொருந்திநின்று விளங்கும் புண்ணிய வடிவினன்; கரிய பெரிய கண்ணை உடைய உமாதேவி கைதொழ இருந்தவன் ஆவன்.
கு-ரை; எனக்குப் பொருந்தி நின்று மருந்தினோடு நல் சுற்றமாய எம் புண்ணியன் எனக் கூட்டுக. பொருந்தி நின்று-துணையாய்ப் பொருந்தித்தோன்றி, ஆய-ஆகிய, கருந்தடங்கண்ணினாள்-கரிய பெரிய கண்ணை உடையவளாகிய. காமாட்சி வழிபட்ட வரலாற்றை உட்கொண்டது இத்திருப்பாடல்(எந்தை -எங்கள் தந்தை.)