பாடல் எண் : 47 - 6
பொருளி னோடுநற் சுற்றமும் பற்றிலர்க்
கருளு நன்மைதந் தாயவ ரும்பொருள்
சுருள்கொள் செஞ்சடை யான்கச்சி யேம்பம்
இருள்கெ டச்சென்று கைதொழு தேத்துமே.
6
பொ-ரை; பற்று அற்றவர்களுக்குப் பொருளும், நற்சுற்றமும், அருளும் நன்மைதந்து ஆதலுற்ற அரும்பொருளும் ஆகியவனும், சுருளுதலைக்கொண்ட செஞ்சடை உடையவனும் ஆகிய பெருமான் உறைகின்ற கச்சிஏகம்பத்தை, உம்மைச்சார்ந்த இருள் மலங்கெடச் சென்று கரங்குவித்து வழிபடுவீர்களாக.
கு-ரை; பற்றிலார்க்குப் பொருளினோடு நற்சுற்மும் அருளுமாகிய நன்மைகளைத்தந்து நிற்கின்ற அரியபொருள், பொருள்-பொன், மணி, நெல் முதலிய செல்வங்கள். பற்றிலர்க்கு- பிற பற்று ஒன்றும் இல்லாதவர்களுக்கு. நன்மை தந்து-நன்மைகளைக் கொடுத்து. சுருள்கொள்-சுருளுதலைக்கொண்ட. இருள்-ஆணவ இருள். ஏத்தும்-தோத்திரம் சொல்லி வணங்குஙகள்்.