பாடல் எண் : 47 - 9
திருவின் நாயகன் செம்மலர் மேலயன்
வெருவ நீண்ட விளங்கொளிச் சோதியான்
ஒருவ னாயுணர் வாயுணர் வல்லதோர்
கருவுள் நாயகன் கச்சியே கம்பனே.
9
பொ-ரை; கச்சியேகம்பத்து இறைவன், திருமகளின் நாயகனாகிய திருமாலும், சிவந்த தாமரை மலர்மேல் உள்ள பிரமனும் அஞ்சி வெருவும்படியாக விளங்குகின்ற நிமிர்ந்த சோதி ஒளியாகவும், ஒப்பற்றவனாகவும், உணர்வு ஆகவும், உணர்வல்லாத கருவினுள் நாயகனாகவும் உள்ளான்.
கு-ரை; திரு-இலக்குமி. அயன்-பிரமன். செம்மலர்-செவ்விய தாமரை. வெருவ-அஞ்ச. ஒருவன்-ஏகன். உணர்வாய்-உணர்வு வடிவாய் இருப்பவன் சித்தவடிவமானவன் என்க. உணர்வல்லதோர் கருவுள் நாயகன் - உணர்வில்லாத சடப்பொருள் களிலும் நிறைந்திருக்கும் தலைவன். இறைவன் சட சித்துகள் அனைத்திலும் நிறைந்திருப்பவன் என்பதாம்,