பாடல் எண் : 48 - 4
பொறிப்புலன்களைப் போக்கறுத் துள்ளத்தை
நெறிப்ப டுத்து நினைந்தவர் சிந்தையுள்
அறிப்பு றுமமு தாயவ னேகம்பம்
குறிப்பி னாற்சென்று கூடித் தொழுதுமே.
4
பொ-ரை; பொறிகளைப், புலன்களின்வழிப் போதல் தவிர்த்து, உள்ளத்தை ஒரு நெறியின்கண்படச் செய்து நினைந்த மெய்யடியார்களின் சிந்தனையுள் அறிதலுறம் அமுதாகிய பெருமான் எழுந்தருளியுள்ள திருஏகம்பத்தைத் திருவருட் குறிப்பினாற் சென்று கூடித் தொழுவோமாக.
கு-ரை; பொறி-மெய், வாயி, கண், மூக்கு, செவி. பொறியால் நுகரப்படும் புலன்கள் என்க. புலன்-சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம். போக்கு-குற்றம். உள்ளத்தை நெறிப்படுத்து-மனத்தை ஒருவழியில் செலுத்தி, அறிப்புறும்-அறிபு என்பதன் விரித்தல். அறிவுறும் என்பது பொருள். குறிப்பினால் சென்று- குறிக்கோளொடு சென்று. தொழுதும் - வணங்குவோம்.