பாடல் எண் : 48 - 7
மூப்பி னோடு முனிவுறுத் தெந்தமை
ஆர்ப்ப தன்முன் னணியம ரர்க்கிறை
காப்ப தாய கடிபொழி லேகம்பம்
சேர்ப்ப தாகநாஞ் சென்றடைந் துய்துமே.
7
பொ-ரை; வெறுப்புமிகுந்து மூப்பினோடு எம்மையெல்லாம் கட்டுவதற்கு முன்பே, அணி உடைய அமரர்க்கு இறை உறைவதும்,காவலுடைய மணமிக்க பொழில் சூழ்ந்ததுமாகிய ஏகம்பத்தைச் சேர்வதாக நாம் சென்று தரிசித்து உய்வோமாக.
கு-ரை; மூப்பு- முதுமைத் தன்மை. முனிவு-வெறுப்பு அல்லது கோபம். உறுத்து-உறுவித்து, அடையச் செய்து. ஆர்ப்பதன் முன் - கூற்றுவன் பிணிப்பதற்கு முன்பு, அணி அமரர்-வரிசைப்பட்ட தேவர். காப்பதாய-காவலை உடையதாகிய அல்லது ஊருக்குக் காவல் செய்யும் அரணாகிய. கடி-மணம். சேர்ப்பு-சேரத்தக்க இடம். காஞ்சியே சிறந்த தல மெக்கருதி. நாம் சென்றடைந்துய்தும்-நாம் சென்று வழிபட்டு உய்யுநெறி காண்போம்.