பாடல் எண் : 49 - 1
பண்காட்டிப்படி யாயதன் பத்தர்க்குக்
கண்காட் டிக்கண்ணில் நின்ற மணியொக்கும்
பெண்காட் டிப்பிறை சென்னிவைத் தான்திரு
வெண்காட் டையடைந் துய்ம்மட நெஞ்சமே.
1
பொ-ரை: அறியாமையை உடைய நெஞ்சமே! பண்ணிசை காட்டி வழிபடுகின்ற, நிலவுலகிற் பொருந்திய தன் அன்பர்களுக்குத் திருக்கடைக்கண் காட்டி அருளி, கண்ணிற்கருமணி போன்றுள்ளவனும், சென்னியின்கண் பெண், பிறை ஆகியவற்றை வைத்தவனும் ஆகிய பெருமானது திருவெண்காட்டை அடைந்து உய்வாயாக.
கு-ரை: பண்காட்டிப் பாடிய - இசையைத் தோற்றுவித்துப் புகழ்ப்பாடலைப் பாடுகின்றவர்களாகிய. (பாடி - படித்தல்). கொண்டு சிவவேடமணிந்த தன் அடியவர்கட்கு எனவும்; படி - பூமி என்று கொண்டு நிலஉலகில் உள்ள அடியவர்களுக்காக எனவும் கூறலாம். கண் - உண்மையறியும் அறிவுக் கண். கண்ணில் நின்ற மணி - அறிவுக்கறிவு. பெண் - பார்வதி. காட்டி - இடப்பாகத்தில் கொண்டு என்னும் பொருளது . உய் - உய்வாயாக.