பாடல் எண் : 49 - 4
பருவெண் கோட்டுப் பைங்கண்மத வேழத்தின்
உருவங் காட்டிநின் றானுமை யஞ்சவே
பெருவெண் காட்டிறை வன்னுறை யும்மிடம்
திருவெண் காடடைந் துய்ம்மட நெஞ்சமே.
4
பொ-ரை: நெஞ்சமே! பருத்த வெள்ளிய தந்தங்களையும், பசுங்கண்களையும், மதத்தையும் உடைய வேழத்தின் உருவத்தை உமையாள் அஞ்சக் காட்டி நின்றவனும், பெரிய சாம்பலால் வெள்ளிய இடுகாட்டில் தங்குபவனும் ஆகிய இறைவன் உறையும் இடமாம் திருவெண்காட்டை அடைந்து உய்வாயாக.
கு-ரை: பரு - பருத்த. வேழத்தின் உருவங்காட்டி நின்றான் - (யானைத் தோலைப் போர்த்து) யானையின் உருவந்தோன்ற நின்றவன். பெருவெண்காடு - சங்காரகாலச் சுடலை. வெள்ளிய சாம்பற்காடாக இருத்தலின் பெருவெண்காடு என்றார்.