பாடல் எண் : 49 - 8
பட்டம் இண்டை யவைகொடு பத்தர்கள்
சிட்ட னாதியென் றுசிந்தை செய்யவே
நட்ட மூர்த்திஞா னச்சுட ராய்நின்ற
அட்ட மூர்த்திதன் வெண்கா டடைநெஞ்சே.
8
பொ-ரை: நெஞ்சே! பட்டமும், இண்டைமாலைகளும் கொண்டு அன்பர்கள் "உயர்ந்தவனே! ஆதியே!" என்று சிந்தைசெய்ய நடனமாடும் மூர்த்தியாகவும், ஞானச்சுடராய் நின்ற அட்டமூர்த்தியாகவும் உள்ள பெருமானின் திருவெண்காடடைந்து வழிபடுவாயாக.
கு-ரை: பட்டம் - நெற்றியிலணியும் அணிகலன். இண்டை - கண்ணி. சிட்டன் - மேலானவன். ஆதி - தலைவன். சிந்தை செய்ய - மனத்தால் தியானிக்க.