பாடல் எண் : 49 - 9
ஏன வேடத்தி னானும் பிரமனும்
தான வேடமுன் தாழ்ந்தறி கின்றிலா
ஞான வேடன் விசயற் கருள்செயும்.
கான வேடன்றன் வெண்கா டடை நெஞ்சே.
9
பொ-ரை: நெஞ்சே! பன்றி வேடம் கொண்ட திருமாலும், பிரமனும் தானவேடத்தை முன் தாழ்ந்து அறிய வலிமையில்லாத ஞானவேடனும், அருச்சுனனுக்கு அருள்செய்யும் காட்டு வேடனும் ஆகிய பெருமானின் திருவெண்காடு அடைந்து வழிபடுவாயாக.
கு-ரை: ஏன வேடத்தினான் - பன்றியாய் அவதரித்த திருமால்; தான் அவ்வேடம் எனப் பிரிக்க. தான் - இறைவன். அவ்வேடம் - அனலாகிய உருவம். தாழ்ந்து - உருவமாறி. ஞானவேடன் - ஞானமே வடிவமாயிருப்பவன். கான வேடன் - காட்டு வேடன்.