பாடல் எண் : 5 - 1
பட்டி ஏறுகந் தேறிப் பலவி(ல்)லம்
இட்ட மாக இரந்துண் டுழிதரும்
அட்ட மூர்த்தியண் ணாமலை கைதொழக்
கெட்டுப் போம்வினை கேடில்லை காண்மினே.
1
பொ-ரை: அடங்காத ஏற்றினை அடக்கி விடையாக் கொண்டு உகந்து ஏறிப் பல மனைகள் தோறும் விருப்பத்தோடு சென்று இரந்து உண்டு அலைந்து சுழலும், அட்டமூர்த்தியின் திருவுருவாகிய திருஅண்ணாமலையைக் கைகளால் தொழ வினைகள் கெட்டு ஒழியும்; என்றும் கேடு இல்லை; காண்பீராக.
கு-ரை: அண்ணாமலையை நினைந்து தொழ உண்டாம் பயன் கூறுகிறது இத்திருப்பதிகம் . பட்டி - அலைந்து திரிந்து கள்ளமேய்ச்சல் மேய்கின்ற மாட்டைப் பட்டிமாடு என்பர். ஊர் சுற்றித் தன் விருப்பம் போல் திரிவாரையும் பட்டி என்பர். "அகப் பட்டியாவார்" (குறள்) "நோதக்க செய்யும் சிறுபட்டி" (கலித்தொகை. 51:1 ) திருமால் கண்ணனாய் ஆயர்பாடியில் சுற்றித் திரிந்து வெண்ணெய் திருடி உண்டவராதலால் பட்டி என்றார். அறவிடை எனினும், அறத்தின் திறம் உயிர்களால் உணர்தல் கூடாமையின் பட்டி என்றார் எனக்கொள்க. அவரே இடபமாய்த் தாங்குதலின் பட்டி ஏறு என்றார். பலஇல்லம் - தாருகாவனத்திலிருந்த ரிஷிபத்தினியர் வீடுகள். இட்டமாக - விருப்பத்துடனே. இரந்துண்டல் - பிச்சையேற்றுண்டல். உழிதரும் - திரியும். அட்ட மூர்த்தி - எட்டுப்பொருள்களை வடிவமாக உடையோன். மூர்த்தி - வடிவு, அதனை உடையது மூர்த்தம் `இரு நிலனாய்த் தீயாகி நீருமாகி இயமானனாய் எரியும் காற்றுமாகி அரு நிலைய திங்களாய் ஞாயிறாகி ஆகாயமாய் அட்டமூர்த்தியாகி' (தி.6.ப.94.பா.1) அட்ட மூர்த்தங்களை உணர்க. திருமால் பிரமன் தேடுதற்கரிய சோதி வடிவாய் எழுந்தருளிய பெருமானாதலின் அட்டமூர்த்தங்களில் ஒன்றும் அத்தன்மையை நினைந்து கூறினார்.
வினைகெட்டுப்போம் நமக்குக் கேடு இல்லை எனக் கூட்டுக. கேடு - துன்பம். காண்மின் என்பது உறுதியுரை, நேரிற்காணுங்கள் என்னும் பொருள் தருதலின்.