|
பொ-ரை: கரும்பினிடைக் கட்டி ஒக்குமாறு துணித்தும் வெட்டியும் வீணை வகைகளோடு பாடும் விகிர்தனாகிய அட்ட மூர்த்தியும் திருவண்ணாமலை மேவிய நட்டமாடும் பெருமானுமாகிய இறைவனை நண்ணினால் நன்றே ஆகும். கு-ரை: கரும்பினிடைக் கட்டியை ஒக்கும் விகிர்தன் எனக் கூட்டினும் அமையும். துணிவெட்டி - வீணையை மீட்டும்போது ஓசையைத் துணித்தும் நரம்பை வெட்டியும். வீணைகள் பாடும் - வீணைவாச்சிய வகைகளோடு தானும் பாடுகின்ற. விகிர்தன் - மாறுபாடு உடையவன்; போக, யோக, வேகம் எனப்படும் ஒன்றொடு ஒன்று ஒவ்வா வேடம் தான் ஒருவனே தரித்தவன். நட்டமாடியை நண்ண நன்கு ஆகும் என்க. நன்கு - நன்மை. |