பாடல் எண் : 50 - 1
எங்கே யென்னை யிருந்திடந் தேடிக்கொண்
டங்கே வந்தடை யாள மருளினார்
தெங்கே தோன்றுந் திருவாய்மூர்ச் செல்வனார்
அங்கே வாவென்று போனா ரதென்கொலோ.
1
பொ-ரை: தென்னனகள் நன்கு தோன்றுகின்ற திருவாய்மூரில் எழுந்தருளியுள்ள அருட்செல்வராகிய இறைவர். என்னை எங்கே என்று தேடி, இருந்த இடத்தைக் கண்டுகொண்டு அங்கே வந்து அடையாளம் அருளியவர், திருவாய்மூர்க்கு வா என்று கூறியருளிச் சென்றார்; அதன் காரணம் என்னை கொல்?
கு-ரை: எங்கே - எங்கே இருக்கின்றாய் என்று; எங்கு ஏய் எனப் பிரித்து ஏய்தல் தங்கியிருத்தல் எனலும் ஆம், இருந்திடம் தேடிக்கொண்டு - தான் தங்கியிருந்த திருமடத்தைத் தேடிக் கொண்டு. அடையாளம் - வெண்ணீறணிந்த திருக்கோலம். தெங்கே தோன்றும் - தென்னைகளே மிகுந்து காணப்படும். அங்கே வா - திருவாய்மூராகிய அங்கு வா. அது என்கொலோ அதற்கு என்ன காரணமோ, அறியேன் என்க.