|
பொ-ரை: தேவர்கள் பணிந்து ஏத்த, (அதுகண்டு) வியப்புறம் மண்ணுலகத்தோர், மறவாது "சிவாயழு என்று தியானிக்க, அவர்களுக்கு இடமாக எழில் மிகும் வானகத்தைப் படைத்தருளியவர், திருப்பாலைத்துறைப் பிரானே. கு-ரை: விண்ணினார் - தேவர். பணிந்தேத்த - வணங்கித் துதிக்க. வியப்புறும் - அதிசயமுறுகின்ற. மண்ணினார் - நிலவுலகில் உள்ளவர்; தேவர் வழிபடுதலைக் கண்டு வியப்புற்ற மண்ணினார் என்க, `சிவாயழு - இது சூக்கும பஞ்சாக்ஷரம் எனப்படுவது. எண்ணினார்க்கு - தியானித்தவர்கட்கு. இடமா - வீற்றிருக்கும் இடமாக. எழில் வானகம் - வீடுபேறு. த்ரயீ எனப்படும் வேதங்கள் சிவநாமத்தை இதயநடுவுள் வைத்துப் போற்றுவது போல மூவர் தேவாரங்களில் நடுவணதாகிய இத்திருமுறையில் நடுவணதாகிய 51 ஆவது பதிகத்து இத்திருப்பதிகத்துள் நடுவணதாகிய இத்திருப்பாடலில் நடுவில் 'சிவாய' என்னும் சிவமூலமந்திரம் அமைந்து விளங்கும் தெய்வ அமைப்பை உடையது இத்திருப்பாட்டு. |