|
பொ-ரை: திருநாகேச்சரத்திறைவர் நாவலம் பெருந் தீவாகிய (ஜம்புத்வீபம்) காட்டிலுள்ளவர். அனைவரும் மேவிவந்து வணங்கி, வினையொடு பாவமாயினவற்றைப் பற்றறுவித்திடும் தேவர் ஆவர். கு-ரை: நாவலந் தீவு-இமயத்தின் தென்பாலுள்ள இந்த நாட்டிற்கு நாவந்தீவு அல்லது சம்புத்தீவு என்று பெயர். இமய உச்சியிலுள்ள மானசரோவரத்தின் நடுவே உள்ள நாவல் மரத்தை உடைய நாடு. வாழ்பவர்- வாழும் மக்கள். மேவிவந்து-விரும்பி வந்து. வினை பாவம் இவற்றினது கட்டுக்களை அறுவித்துக் கொள்ளும் படி செய்யும் தேவராயிருப்பவர் என்க. பற்றறுவித்தல்-சிறிதும் இல்லாது நீங்கச் செய்தல். |