பாடல் எண் : 52 - 9
வட்ட மாமதில் மூன்றுடன் வல்லரண்
சுட்ட செய்கைய ராகிலுஞ் சூழ்ந்தவர்
குட்ட வல்வினை தீர்த்துக் குளிர்விக்கும்
சிட்டர் போல்திரு நாகேச் சரவரே.
9
பொ-ரை: திருநாகேச்சரத்திறைவர் வட்டமாக வளைந்த மதில் மூன்றுடன் கூடிய வல்லரண்களைச் சுட்டசெய்கையர்; ஆயினும் தம்மை உள்ளத்தே சூழ்ந்தவர்களின் திரண்ட வல்வினைத் துன்பங்களைத் தீர்த்துக் குளிரும்படிசெய்யும் உயர்ந்தோர் ஆவர்.
கு-ரை: வட்டம் - வட்டவடிவாகிய. மா - சிறந்த. வல்லரண் - வலிய கோட்டை. சுட்ட - அழித்த. குட்டவல்வினை - திரண்ட பழ வினைகள். இப்பாடல் தி.5.ப.42.9ஆவது பாடலைப் பெரிதும் ஒத்துள்ளது.