பாடல் எண் : 53 - 1
கோணன் மாமதி சூடியோர் கோவணம்
நாணில் வாழ்க்கை நயந்தும் பயனிலை
பாணில் வீணை பயின்றவன் வீரட்டம்
காணி லல்லதென் கண்துயில் கொள்ளுமே.
1
பொ-ரை: வளைந்த பிறைமதி சூடி, கோவணம் அணிந்து விரும்பியும் பயனற்ற நாணமில்லாத வாழ்க்கை உடையவரேனும், வீணையிற் பாடல் பயின்ற சிவபெருமான் உறையும் திருவதிகை வீரட்டத்தைக் கண்டு தொழுதபின்னல்லது என் கண்கள் உறக்கம் கொள்ளுமோ?
கு-ரை: கோணல் மாமதி - வளைந்து பிறந்த பிறை. ஓர் கோவணம் - ஒரு கோவணமணிந்து. நாணில் வாழ்க்கை - வெட்கமில்லாத வாழ்க்கை. கோவணங்கட்டித் திரிதலின் நாணில் வாழ்க்கை என்றார். நயந்தும் -விரும்பியும். பயன்நிலை - பயனுக்கு நிலைக்களனாயிருப்பவர். பாணில் - இசைகளில். வீணை பயின்றவன் - இசைகளில் வீணை இசையைப் பழகியவன். உலகப் படைப்பின்போது இறைவனிடத்துண்டாம் நாததத்துவத்தை வீணையாகக் கூறல் மரபு. காணில் அல்லது - கண்டு தொழுதாலல்லாமல். துயில் - உறக்கம். என்கண் துயில் கொள்ளுமோ என்க. அகப்பொருட்டுறையில் தலைவி கூற்றுப் போல வைத்துத் தம்மியல்பு கூறுகிறார்.