பாடல் எண் : 54 - 1
எட்டு நாண்மலர் கொண்டவன் சேவடி
மட்ட லரிடு வார்வினை மாயுமால்
கட்டித் தேன்கலந் தன்ன கெடிலவீ
ரட்ட னாரடி சேரு மவருக்கே.
1
பொ-ரை: கன்னற்கட்டியும் தேனும் கலந்ததைப் போன்று இனிக்கும் கெடிலவீரட்டனார் சேவடி சேர்பவராய், எட்டுவகைப்பட்ட நாண்மலர்களாகிய தேனவிழும் மலர்களை இட்டு வழிபடுவார் வினைகள் மாயும்.
கு-ரை: எட்டு நாண்மலர்-அஷ்ட புஷ்பங்கள் எனப்படும் எண் வகைப் புதிய மலர்கள். அவையாவன: புன்னை, வெள்ளெருக்கு, சண்பகம் , நந்தியாவர்த்தம், பாதிரி, குவளை, அலரி, செந்தாமரை ஆகிய பூக்கள் போல விரும்பத்தக்க எண்குணங்கள் எனலுமாம். மட்டு அலர்-தேன் நிறைந்த மலர். இடுவார்-அர்ச்சிப்பார். மாயும்-அழியும். ஆல் அசை. கட்டி-கரும்புக் கட்டியாகிய வெல்லத்தோடு. தேன் கலந்தன்ன- தேனைக் கலந்ததை ஒத்த: வீரட்டனார் என்க. அடிசேருமவருக்கு-திருவடிகளைச் சேர்பவர்களுக்கு. வினைமாயும் என இயைத்து முடிவு கொள்க.பூசையால் பவன் முதலிய எட்டு நாமங்கள் சொல்லி வழிபடும் மரபும் இங்கு நினைக்கத்தக்கது. ஆகமங்களில் விதித்தவாறு அட்ட புட்பம் சாத்தி வழிபடுதலையே குறிப்பது இத்திருப்பதிகம். அகப்பூசைக்குரிய அட்டபுட்பங்கள்-கொல்லாமை, ஐம்பொறியடக்கம், பொறை, அருள், அறிவு, வாய்மை, தவம், அன்பு என்னும் நலஞ் சிறந்தார் மனத் தகத்து மலர்கள் எட்டும். இதனைத் தண்டகம் என்பர்.