பாடல் எண் : 54 - 6
ஏழித் தொன்மலர் கொண்டு பணிந்தவர்
ஊழித் தொல்வினை யோட அகற்றுவார்
பாழித் தண்புனல் பாய்கெடி லக்கரை
வேழத் தின்னுரி போர்த்தவீ ரட்டரே.
6
பொ-ரை: வன்மை உடையதாகிய குளிர்புனல் பாய்கின்ற கெடிலக்கரையில் உள்ள திருவதிகை வீரட்டத்தில் எழுந்தருளியிருப்பவரும், வேழத்தின் உரியைப் போத்தவருமாகிய பெருமானே, இதழி(ஏழி) யாகிய கொன்றை மலர்களைக் கொண்டு பணிந்த அடியார்களுடைய ஊழியாகத் தொடர்ந்துவரும் பழைய வினைகள் ஓடும்படி நீக்குவார்.
கு-ரை: ஏழி-ஏழை முன்னாக உடையது எட்டு தொன்மலர்-தொன்மையாகச் சொல்லப்பட்ட மலர். ஊழி - பல பிறப்புக்கள். பாழி - வலிமை.