பாடல் எண் : 55 - 7
பண்ணி னால்மறை பாடலோ டாடலும்
எண்ணி லார்புர மூன்றெரி செய்ததும்
நண்ணி னார்துயர் தீர்த்தலும் நாரையூர்
அண்ண லார்செய்கை யம்ம வழகிதே.
7
பொ-ரை: இசையொடு பொருந்திய நான்மறைகளைப் பாடுதலும், ஆடுதலும், நல்ல எண்ணமில்லாத தீயோர்களது முப்புரங்களை எரித்தலும், தம்மைப் பொருந்தியவரது துயரங்களைத் தீர்த்தலும் ஆகிய திருநாரையூர் அண்ணலார் செய்கைகள் அனைத்தும் மிக்க வியப்பும் அழகும் உடையனவேயாம்.
கு-ரை: பண்ணினால்-இசையினாலே. மறை பாடுதலோடு என்க. எண்ணிலார்-பகைவர்.