பாடல் எண் : 56 - 6
ஆவின் பால்கண் டளவி லருந்தவப்
பாலன் வேண்டலுஞ் செல்லென்று பாற்கடல்
கூவி னான்குளி ரும்பொழிற் கோளிலி
மேவி னானைத் தொழவினை வீடுமே.
6
பொ-ரை: பசுவின் பாலை முன் உண்டமையால், மிக்க அருந்தவம் உடைய பாலனாகிய உபமன்யு அப் பால் வேண்டலும், 'செல்க' என்று பாற்கடலைக் கூவி அருளியவனும் குளிர் பொழில்களையுடைய கோளிலியில் விரும்பி உறைபவனுமாகிய பெருமானைத் தொழ நம் வினைகள் வீடும். 'பெருமானது அளவில் ஆற்றலும் பேரருளுடைமையும் ' குறித்தபடி.
கு-ரை: ஆவின்பால் கண்டு - காமதேனுவின் பாலை முன் உண்டு அறிந்தமையால், அளவில் அருந்தவப் பாலன் - அளவற்ற அரிய தவத்தை உடைய குழந்தை உபமன்யு. வேண்டலும் - விரும்பி அழுதலும். செல்லென்று - உபமன்யுவை நோக்கிச் செல்வாயாக என்று. கூவினான் - அழைத்து ஏவல் செய்தான். வீடும் - அழியும். உபமன்யு தாய்மாமன் வசிட்டனிடத்து வளர்ந்தபோது உண்டது காமதேநுவின்பால், தந்தை வியாக்கிர பாதரிடம் வந்தபோது அது கிடைக்காமையால் அது வேண்டி அழுதார். "பாலுக்குப் பாலகன் வேண்டியழுதிடப் பாற்கடல் ஈத்த பிரான்" (தி.9.திருப்பல்லாண்டு-9).