பாடல் எண் : 57 - 4
விழவி னோசை யொலியறாத் தண்பொழில்
பழகி னார்வினை தீர்க்கும் பழம்பதி
அழல்கை யானம ருந்திருக் கோளிலிக்
குழக னார்திருப் பாதமே கூறுமே.
4
பொ-ரை: விழாக்களின் ஓசையும் ஒலியும் விட்டு நீங்காத குளிர் பொழில்களை உடையதும், தன்னிடம் பழகி வாழ்வார்களது வினைகளைத் தீர்க்கும் தொல்பதியும், அழலைக் கையில் ஏந்திய பெருமான் அமர்ந்திருப்பதும் ஆகிய திருக்கோளிலியில் குழகன் திருப்பாதத்தையே கூறுவீராக.
கு-ரை: ஓசை - இன்னதென அறியாத ஆரவாரம். ஒலி - இசை முதலிய ஒலி நிகழ்ச்சிகள். பழகினார் - தம்மொடு அன்பு செலுத்திப் பழகினார். அழல்கையான் அமரும் கோளிலி என்க. குழகன் - என்றும் இளையன்.