பாடல் எண் : 57 - 6
காற்ற னைக்கடல் நஞ்சமு துண்டவெண்
நீற்ற னைநிமிர் புன்சடை யண்ணலை
ஆற்ற னையம ருந்திருக் கோளிலி
ஏற்ற னாரடி யேதொழு தேத்துமே.
6
பொ-ரை: காற்று வடிவாயவனும், கடல் விடம் உண்டவனும், வெண்ணீறணிந்தவனும், நிமிர்ந்த புன்சடை உடைய அண்ணலும், சடையிற் கங்கையாற்றினை உடையவனும் ஆகிய திருக்கோளிலியில் அமரும் இடபத்தை உடையானை, அவன்றன் திருவடிகளையே தொழுது ஏத்துவீராக.
கு-ரை: காற்றனை - காற்று வடிவானவனை. நிமிர் - நிமிர்ந்த. புன் - மெல்லிய. ஆற்றனை - ஆறு சூடியவனை. ஆல்தனை அமரும் ஏற்றனை எனினும் பொருந்தும். ஏற்றனார். (இடபம்) ஏற்றுர்தியை உடையவர். ஏத்தும் - தோத்திரியுங்கள். முதல்வனை அவன் தன் திருவடியை நினைத்தே தொழுது ஏத்துமின் என்றது அதுவே நினைக்க வருவது ஆதலின். 'நின்னிற் சிறந்த நின்தாள் இணையவை' (பரிபாடல் பா.4.அடி.62.)