பாடல் எண் : 57 - 7
வேத மாயவிண் ணோர்கள் தலைவனை
ஓதி மன்னுயி ரேத்து மொருவனைக்
கோதி வண்டறை யுந்திருக் கோளிலி
வேத நாயகன் பாதம் விரும்புமே.
7
பொ-ரை: வைதிகத் தேரின் உறுப்புக்களாய் நின்ற விண்ணோர்களுக்குத் தலைவனும், நிலைபெற்ற உயிர்கள் ஓதி ஏத்தும் ஒப்பற்றவனும், வண்டுகள் கோதி ஒலிக்கும் மலர்களின் வளமுடைய திருக்கோளிலியில் வேதநாயகனுமாகிய பெருமானின் பாதங்களை விரும்புவீராக.
கு-ரை: வேதமாய - வேத வடிவினனாய் உள்ள. வேதமாய விண்ணோர்கள் - வேதம், வைதிகத்தேர்; அதன் உறுப்புக்களாய் இருந்த விண்ணோர். விண்ணோர்கள் கருவிகளாக சிவபிரான் கருத்தாவாதலை அத்தேரின் அமைப்பு காட்டிற்று. மன்னுயிர் - உலகில் நிலைபெற்ற உயிர்கள். ஓதியேத்தும் ஒருவனை - கற்றுத் துதிக்கும் முதல்வனை. கோதி - மகரந்தங்களை வாயால்கிண்டி. அறையும் - ஒலிக்கும். வேதநாயகன் - வேதங்களுக்குத் தலைவன்.