|
பொ-ரை: போரிடுகின்ற நெறியிற் படைக்கலம் வேண்டி நல்ல பூம்புனல் பாய்ந்துவரும் ஆற்றில் மூழ்கி, மலர் கொண்டு வழிபடுவோனாகிய கருநிறத்துத் திருமாலுக்கு இனிய அருள் செய்தவனுக்குரிய காணத்தக்க திருமாற்பேறு தொழ வினைகள் தேயும். கு-ரை: பொரும் ஆற்றின் - போர்செய்தற்குரிய முறையால். படை - சக்கரமாகிய ஆயுதம். ஆற்றில் வரும்பூம்புனல் மலர் - பொலிவுடைத்தாய் வரும் ஆற்றுத் தண்ணீரும், மலரும். உம்மைத் தொகை. கருமாற்கு - கருநிறம் பொருந்திய திருமாலுக்கு . திருமால் வழிபட்ட தலமாதலை நினைப்பித்தது. காண்தகு - காண்டற்கு இனிதாகிய. |