|
பொ-ரை: தீவினை செய்தாரைத் துணிக்கின்ற வண்ணத்தையும், ஒளியையும் உடைய சக்கரப்படையினைக் கொள்வதற்காக எண்ணி, அழகு வண்ணம் உடைய மலர்களைக் கொண்டு திருவடிகளை அருச்சித்த நீலமணிபோலும் நிறமுடையானாகிய திருமாலுக்கு அருள் செய்தவன் உறையும் திருமாற்பேற்றைப் பணிகின்ற இயல்புடையார்க்குப் பாவங்கள் இல்லையாம். கு-ரை: துணிவண்ணம் - பகைவரைத் துணிக்கின்ற தன்மை. சுடராழி - ஒளியையுடைய சக்கரம். கொள்வான் - கொள்வதற்காக. எண்ணி - நினைத்து. அணி - அழகிய. வண்ணத்து - செந்நிறத்து. அலர் - தாமரை மலர். மணி வண்ணனுக்கு - நீலமணி போன்ற கரிய நிறத்தையுடைய திருமாலுக்கு. பணிவண்ணத்தவர்க்கு - பணியும் தன்மையையுடையவர்க்கு. |