பாடல் எண் : 6 - 5
துளைக்கை வேழத் துரியுடல் போர்த்தவர்
வளைக்கை யாளையொர் பாக மகிழ்வெய்தித்
திளைக்குந் திங்கட் சடையில் திசைமுழு
தளக்குஞ் சிந்தையர் போலுமா ரூரரே.
5
பொ-ரை: திருவாரூர்ப் பெருமான், துளையுள்ள துதிக்கை உடைய யானையின் உரித்த தோலைப் போர்த்தவர்; வளையணிந்த கையாளாகிய உமையம்மையை ஒருபாகமாக மகிழ்ந்தெய்தியவர்; அவர் தமது பிறை பொருந்திய சடையினால், எட்டுத் திசைகளையும் அளந்தறியும் சிந்தை உடையவர் போலும்; உலகமே உருவமா (விச்சுவரூபியா)க நின்றாடுவார் என்பது கருத்து.
கு-ரை: துளைக்கை வேழம் - துளையுடைய கையோடு கூடிய யானை, உரி -உரிக்கப்பட்டது; தோல். வளைக்கையாள் - வளையல் அணிந்த கையையுடையவள்; பார்வதி. பார்வதி தேவியை இடப்பாகத்தே கொண்டு மகிழ்வு எய்துவித்து அவ்வின்பத்தால்தானும் திளைத்திருக்கும். சடையுள் திங்களையுடைய ஆரூரர் என்க.