|
பொ-ரை: தேனொழுகும் புதுமலரணிந்த குழலாளாகிய உமையம்மையொடு பெரிய (திருமாலாகிய) விடையினை விருப்பத்தினோடு உகந்து ஏறும் இறைவனார், கட்டுவாங்கம், சுடர்ந்தெரியும் கனல், மழு, மான் எனுமிவற்றைக்கொண்ட எட்டுத் தோளராகிய திருவாரூர்ப் பெருமானே ஆவர். கு-ரை: மட்டு - தேன். தேன் நிறைந்த பூக்கள் சூடிய என்றபடி. வார்குழல் - நீண்ட கூந்தல். மால்விடை - திருமாலாகிய இடபம். பெரிய விடை என்றும் ஆம். இட்டமா - விருப்பமாக. உகந்து - மகிழ்ந்து. கட்டுவாங்கம் - இறைவன் திருக்கரத்தேந்திய கட்வாங்கம் என்னும் ஆயுதம். கனல்மழு - சொலிக்கின்ற மழு. அட்டமாம் புயம் - எட்டுத்தோள்கள். ஆரூரர் ஆகும் (விளங்குவார்) என்க. |