பாடல் எண் : 60 - 6
ஈட்டும் மாநிதி சால இழக்கினும்
வீட்டுங் காலன் விரைய அழைக்கினுங்
காட்டில் மாநட மாடுவாய் காவெனில்
வாட்டந் தீர்க்கவும் வல்லர்மாற்பேறரே.
6
பொ-ரை: வருந்திச் சேர்த்த பெருஞ்செல்வத்தை மிகுதியாக இழந்தாலும், அழிக்கும் காலன் விரையவந்து அழைத்தாலும், சுடுகாட்டில் பெரிய நடனம் ஆடுகின்ற பெருமானே! காப்பாற்றுவாயாக! என்றழைத்தால், திருமாற்பேற்றிறைவர் வாட்டம் தீர்க்கவும் வல்லராவர்.
கு-ரை: ஈட்டும் - சேர்க்கும். மாநிதி - மிக்க செல்வம். சால - மிக. வீட்டும் - நம்மை அழிக்கும். காட்டில் - இடுகாட்டில். கா - காப்பாற்றுவாயாக. எனில் - என்றழைத்தால். வாட்டம் - இயமவாதனையாம் துன்பம்.