பாடல் எண் : 61 - 1
முத்தூ ரும்புனல் மொய்யரி சிற்கரைப்
புத்தூ ரன்னடி போற்றியென் பாரெலாம்
பொய்த்தூ ரும்புல னைந்தொடு புல்கிய
மைத்தூ ரும்வினை மாற்றவும் வல்லரே.
1
பொ-ரை: மொய்க்கின்ற முத்துக்கள் ஊர்ந்து வரும் தண்ணீரை உடைய அரிசிலாற்றின் கரையில் உள்ள புத்தூரில் உறையும் பெருமான் "திருவடி போற்றி" என்று கூறுவோரெல்லாம், பொய்யுடையதாகி ஊர்கின்ற ஐந்து புலன்களோடு, பொருந்திய வன்மை உடையதாய் ஊர்கின்ற வினைகளையும் மாற்றும் வல்லமை உடையவர்கள்.
கு-ரை: முத்தூரும் புனல் - முத்துக்களை ஊர்ந்து செல்லும் தண்ணீர். அரிசிற்கரை - அரிசிலாற்றங்கரை. மொய் - நிறைந்த. போற்றியென்பாரெலாம் - போற்றி என்று சொல்வாரெல்லாரும். பொய்த்தூரும் புலன் ஐந்து - அழிவையே மேற்கொண்டுள்ள ஐந்து புலன்கள். புல்கிய - சேர்ந்த. மைத்து ஊரும் வினை - கரிதாய் மயக்கம் செய்து வருகின்ற வினைகள். மாற்றவும் நீக்கவும். வல்லர் - வல்லமையுடையர்.