பாடல் எண் : 61 - 4
வேத னைமிகு வீணையில் மேவிய
கீத னைக்கிள ருந்நறுங் கொன்றையம்
போத னைப்புனல் சூழ்ந்தபுத் தூரனை
நாத னைநினைந் தென்மனம் நையுமே.
4
பொ-ரை: வேதங்கள் ஓதுபவனை, வீணையில் மிகுகின்ற கீதங்கள் உடையவனை, மணம் வீசுகின்ற கொன்றையாகிய அழகிய போதினை அணிந்தவனை, அரிசிற் புனல் சூழ்ந்த புத்தூரில் உள்ள நாதனை, என் மனம் நினைந்து நெகிழ்கின்றது.
கு-ரை: வேதனை - வேதங்களின் வடிவாயுள்ளவனை, அல்லது வேதங்களை அருளிச்செய்தவனை. மிகு - சிறந்த. வீணையில் மேவிய கீதனை - வீணையில் பொருந்திய இசை வடிவானவனை. கிளரும் - விளங்கும். நறும் - மணங்கமழும். கொன்றையம் போதனை - கொன்றைமலரணிந்தவனை. புனல்சூழ்ந்த - நீர்வளம் சூழ்ந்த.