பாடல் எண் : 61 - 7
கனல்அங் கைதனி லேந்திவெங் காட்டிடை
அனலங் கெய்திநின் றாடுவர் பாடுவர்
பினலஞ் செஞ்சடை மேற்பிறை யுந்தரு
புனலுஞ் சூடுவர் போலும்புத் தூரரே.
7
பொ-ரை: புத்தூரில் எழுந்தருளியுள்ள இறைவர் தம் அழகிய கையினில் தீயையேந்தி, வெவ்விய காட்டிடை நெருப்புப் பொருந்திய இடத்திடை எய்தி நின்று ஆடும் இயல்பினர்; பாடும் இயல்பினர்; பின்னுதற்குரிய அழகிய செஞ்சடைமேல் பிறையும் கங்கையும் சூடும் இயல்பினர்.
கு-ரை: கனல் - நெருப்பு. அங்கை - அகங்கையில். வெங்காட்டிடை - இடுகாட்டில். அங்கு, அசை. நெருப்பு அவ்விடங்களில் பற்றியெரியும்படி அனல்வீசி என்க. பினலம்செஞ்சடை - பின்னியது போன்று முறுக்குண்ட அழகிய சிவந்த சடை. தருபுனல் - ஓடிவரும் கங்கை அல்லது மக்கட்கு நல்வாழ்வு தரும் கங்கை என்க. போலும் - அசைப்பிலயம் என்ற பாடத்திற்குப் பிரளயம் என்பதன் இடைக் குறை என உரைக்க.