பாடல் எண் : 62 - 1
ஒருத்த னைமூ வுலகொடு தேவர்க்கும்
அருத்த னையடி யேன்மனத் துள்ளமர்
கருத்த னைக்கடு வாய்ப்புன லாடிய
திருத்த னைப்புத்தூர்ச் சென்றுகண் டுய்ந்தெனே.
1
பொ-ரை: ஒப்பற்றவனும், மூன்றுலகங்களுக்கும் தேவர்க்கும் பொருளாய் உள்ளவனும், அடியேன் மனத்துள் அமர்கின்ற கருத்தனும், தீயாடிய திருத்தமுற்றவனுமாகிய பெருமானைப் புத்தூரிற் சென்று, கண்டு, உய்ந்தேன்.
கு-ரை: ஒருத்தனை - மூவுலகொடு தேவர்க்கும் ஒருவன் என்று ஏத்தப்படுபவனை. அருத்தனை - பொருளாயிருப்பவனை. கருத்தனை - முதற் பொருளானவனை. கடுவாய்ப்புனல் - கடுவாய் என்னும் ஆற்றின் தண்ணீர். திருத்தன் - திருத்தமானவன். உய்ந்தேன் என்பது உய்ந்தென் எனக் குறுகியது. ஏ - அசை. கடுவாய் நதிக்கரையில் உள்ள புத்தூர் என்க.