பாடல் எண் : 62 - 6
பந்த பாச மறுத்தெனை யாட்கொண்ட
மைந்த னைம்மண வாளனை மாமலர்க்
கந்த நீர்க்கடு வாய்க்கரைத் தென்புத்தூர்
எந்தை யீசனைக் கண்டினி தாயிற்றே.
6
பொ-ரை: பாசமாகிய கட்டினை அறுத்து, என்னை ஆட்கொண்ட பெருவீரனும், மணவாளக்கோலம் உடையானும், பெரிய மலர்களின் நறுமணம் மிக்க நீரை உடைய கடுவாய்க் கரையிலுள்ள தென்புத்தூரில் உள்ள எந்தையும் ஆகிய ஈசனைக் கண்டதனால் அடியேற்கு இனிதாயிற்று.
கு-ரை: பந்தபாசம் -அன்புப் பிணிப்பாகிய ஆசை. மைந்தனை- வலிமையுடையவனை. கந்தம் - மணம். கண்டு- காணுதலால். இனிதாயிற்று-என் வாழ்வு இனிதாயிற்று என்க.