பாடல் எண் : 62 - 9
இடுவா ரிட்ட கவளங் கவர்ந்திரு
கடுவா யிட்டவர் கட்டுரை கொள்ளாதே
கடுவாய்த் தென்கரைப் புத்தூ ரடிகட்காட்
படவே பெற்றுநான் பாக்கியஞ் செய்தெனே.
9
பொ-ரை: பிச்சையிடுவார் இட்ட சோற்றுருண்டையினைப் பெற்றுத் தம் பெரிய கொடிய வாயில் இடும் சமணர்களது கட்டியுரைக்கும் பேச்சைக்கொள்ளாமல், கடுவாய்த்தென்கரைப் புத்தூரின் கண் எழுந்தருளியுள்ள அடிகட்கு ஆட்படப் பெற்று நான் பெரும் பாக்கியம் செய்தவன் ஆயினேன்.
கு-ரை: இடுவாரிட்ட -கொடுக்கும் குணமுள்ளவர் இட்ட. கவளம் - சோற்றுருண்டை, கவர்ந்து -உண்டு. இரு -பெரிய. கடுவாயிட்டவர் - கடுக்காயை வாயின்கண் இட்டவர். கட்டுரை - அறிவுரை. கொள்ளாதே- ஏற்றுக்கொள்ளாமல்; தம்முன்னைநிலை நினைந்து கூறியது. ஆட்படவே பெற்று - ஆளாகுந்தன்மையையே பெற்று. நான் பாக்கியம் செய்தேன் - நான் சிறந்த பாக்கியத்தைச் செய்தவனானேன்.