|
பொ-ரை : அலைகள் ஆடுகின்ற பெரிய நீரினை உடைய காவிரியின் தென்கரையில் உள்ள குரங்காடுதுறையில் வீற்றிருக்கும் அழகிய கபாலம் கைக்கொண்ட பெருமான், இரங்காத வலிய மனத்தவர்களாகிய அரக்கர்கள் இயங்குகின்ற முப்புரங்காவல் அழியுமாறு பொடியாக்கியவன் ஆவன். கு-ரை: இரங்கா வன்மனத்தார்கள்-பிறர் துன்பங்கண்டு இரங்காத கல்மனங்கொண்டவர்கள். இயங்கும் -ஊர்ந்து செல்லும். முப்புரம் - மூன்று கோட்டைகள். காவல் அழிய - காத்தல் தொழில் அழியும்படி. பொடியாக்கினான் - நீறாக்கியவன். தரங்கம் ஆடும் - அலைகள் அசையும். தடநீர் - மிக்கநீர். கோலம் -அழகிய. |